Govt Notification
கனமழையை எதிர்கொள்ள கோவை மாநகராட்சி தயார்: மண்டல வாரியாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையையொட்டி, கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை தொடர்வதால், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய கூட்டரங்கில் (ICCC), இன்று (21.10.2026) நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு மண்டலத்தின் மூலமாக பிற துறைகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள், புதிய மழைநீர் வடிகால் கட்டுவது, ஏற்கெனவே உள்ள மழைநீர் வடிகால்களை விரிவுபடுத்துவது, அதிக திறன் கொண்ட புதிய மோட்டார்கள், பம்புகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக கட்டா ரவி தேஜா கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி அடுத்த மூன்று/நான்கு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கட்டா ரவி தேஜா கூறினார். கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மழை காலங்களில் தொய்வின்றி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.10 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகையில், ஜெனரேட்டர், மோட்டார், பம்பு உள்ளிட்ட தளவாட பொருட்களை வாடகைக்கு பெறவும், தேவைப்படும் இடங்களில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தவும் பயன்படுத்தி, நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.
மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே, நீர் உறிஞ்சும் மோட்டார் வாகனத்துடன் பணியாளர்கள் தயாராக இருப்பதை அந்தந்த உதவி ஆணையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களை தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக நிவாரண முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை உதவி வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். மழைநீர் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களிடமிருந்து மழை சம்மந்தமாக பெறப்படும் புகார்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
முன்னதாக, மேற்கு மண்டலம், வார்டு எண் 34க்கு உட்பட்ட பாலாஜி நகர், ராஜன் நகர், கே.கே.நகர், குட்டைகாடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, மழைநீர் வடிகால்களை தூர்வார சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வு மற்றும் கூட்டத்தின் போது, துணை ஆணையாளர் ர.சரஸ்வதி, மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், கல்வி குழுத்தலைவர் மாலதி நாகராஜ், உதவி ஆணையர்கள் நர்மதா, மோகனசுந்தரி, கணேசன், தட்சிணாமூர்த்தி, முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

