Govt Notification
கோவை வடக்கு மண்டலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் ஆய்வு
SimpliCity News Team · 7 hours ago

Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு இன்று (17.10.2026) நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாகச் சென்று பரிசோதித்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.18-க்குட்பட்ட கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம் பிரதான சாலையில், இரயில்வே பாலம் கீழ் மழைநீர் தேங்கும் பட்சத்தில் உடனடியாக அப்புறப்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், வடக்கு மண்டலம், வார்டு எண்.30-க்குட்பட்ட கணபதி, பழைய சக்தி சாலையில் உள்ள கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டார். மழைநீர் தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
