Govt Notification
கோவையில் ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால், சாலை பழுது பணிகள் துரிதம்
SimpliCity News Team · 8 hours ago

Coimbatore: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிக்கும், சாலை பழுது சரி செய்யும் பணிக்கும் மண்டலத்திற்கு தலா ரூ.50 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால், கால்வாய் உள்ளிட்ட நீரோடைகளை தூர்வாருவதற்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் சுமார் 120.44 கிலோமீட்டர் நீளத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 58.46 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை சீரமைக்கும் பணிகளும் (Patch Work) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.62க்குட்பட்ட 3.195 கிலோமீட்டர் நீளம் கொண்ட ராஜவாய்க்கால் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், 2.695 கிலோமீட்டர் நீளம் கொண்ட குளத்துவாய்க்கால் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வார்டு எண்.65-க்குட்பட்ட பாரதிநகர் பிரதான சாலை, வார்டு எண்.67க்குட்பட்ட என்.ஜி.என். வீதி, திருவள்ளுவர் வீதி, வார்டு எண்.68, 69-க்குட்பட்ட சுப்பராயன் வீதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை, எஸ்.என்.தாஸ் லே-அவுட் ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 3.25 கிலோமீட்டர் நீளம் கொண்ட சங்கனூர் பள்ளம் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், வார்டு எண்.81-க்குட்பட்ட ராஜா வீதி, வார்டு எண்.82-க்குட்பட்ட லங்கா கார்னர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கால்வாய், வார்டு எண்.48-க்குட்பட்ட 100 அடி சாலை, லட்சுமணன் நகர், வார்டு எண்.49-க்குட்பட்ட சின்னுசாமி சாலை மற்றும் செங்காடு சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன.
இதேபோல், அனைத்து மண்டலங்களிலும் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


