Govt Notification
கோவை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 61 பணியிடங்கள் - விண்ணப்பிக்க அழைப்பு
SimpliCity News Team · 12 hours ago

Coimbatore: கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில் காலியாக உள்ள 61 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில் 02 பெண் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் மற்றும் 59 ஆண் ஊர்க்காவல் படை ஆளிநர்கள் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 09.10.2026 முதல் 23.10.2026 வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது கோவை மாவட்ட காவல் அலுவலகத்திலோ 23.10.2026-ம் தேதி மாலை 17.00 மணிக்குள் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 23.10.2026-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
தகுதி மற்றும் விபரம்: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.10.2026 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும், 50 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்கவேண்டும். நல்ல உடல் தகுதியுடையவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான TC அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான அத்தாட்சி மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இவ்வமைப்பில் ஈடுபாட்டுடன் பணி புரிபவர்களாகவும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஊர்க்காவல் படையில் குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மத்திய/மாநில அரசு ஊழியராகவோ, சுயவேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருப்பினும் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.