Govt Notification
கோவையில் காவல்துறையினருக்கு 'மகிழ்ச்சி' திட்டம் நிகழ்ச்சி
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: உலக மனநல நாளை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனநலம் மற்றும் குடும்ப நலனை மேம்படுத்தும் நோக்கில் 'மகிழ்ச்சி' திட்டம் நிகழ்ச்சி அக்டோபர் 12, 2026 அன்று நடைபெற்றது.
கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (பொறுப்பு) காவல் ஆணையர் R.V. ரம்ய பாரதி, IPS தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, காவல்துறையினர் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தது.
காவல்துறையினர் தங்களது பணியில் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும், பணி அழுத்தம் மட்டுமின்றி குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் மனநல ஆலோசனை, போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை, தனிநபர் மற்றும் குடும்ப ஆலோசனை, தொடர் கண்காணிப்பு போன்ற சேவைகள் காவல்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரம்ய பாரதி விளக்கினார்.
'உதவி தேவைப்படும் நேரத்தில் ஆலோசனை பெறுவது பலவீனம் அல்ல; அது நமது பலத்தின் அடையாளம். எனவே, காவல்துறையினர் அனைவரும் இந்தத் திட்டத்தின் பயன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என ரம்ய பாரதி அறிவுரை வழங்கினார். மனநலம் சிறந்த காவல்துறை, வலிமையான காவல்துறை; வலிமையான காவல்துறை, பாதுகாப்பான சமுதாயத்தின் அடித்தளம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த உன்னதமான திட்டத்தைச் செயல்படுத்தி வரும் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டலத்தின் மூத்த ஆலோசனை மனநல மருத்துவர் டாக்டர் என். எஸ். மோனி, கோவை மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு P.தங்கதுரை IPS, காவல் துணை ஆணையர் தெற்கு G.கார்த்திகேயன், காவல் துணை ஆணையர் போக்குவரத்து S.S.மகேஸ்வரன் IPS, காவல் துணை ஆணையர் ஆயுதப்படை M.ராஜ் கண்ணா மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் CWC N.சூர்யமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை 65 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


