Govt Notification
கோவை இராமசெட்டிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கண்காட்சி
SimpliCity News Team · 3 days ago

Coimbatore: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.89-க்குட்பட்ட இராமசெட்டிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளுடன் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 12, 2026 அன்று, தெற்கு மண்டலம் வார்டு எண்.89-க்குட்பட்ட இராமசெட்டிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மழைநீர் சேகரிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு படைப்புகளுடன் மழைநீர் சேகரிப்பு கண்காட்சி இடம்பெற்றது.
மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, வாசகங்கள் கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.
மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்கு உட்பட்ட கே.வி.கே.நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்கு உட்பட்ட சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கனகராஜ்(பொ), உதவி பொறியாளர் சபரிராஜ், கல்விப்பிரிவு மேற்பார்வையாளர் பூங்கொடி, பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


