Govt Notification
கோவை காந்திபுரத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
SimpliCity News Team · 5 days ago
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காந்திபுரம் 2 ஆவது வீதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.48க்கு உட்பட்ட காந்திபுரம் 2 ஆவது வீதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று (09.10.2026) இந்த விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேரணியானது, ஜி.பி. சிக்னல், சத்தி சாலை, டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மீண்டும் காந்திபுரம் 2 வீதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, காந்திபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அங்கு வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு இயக்கத்தில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். பின்னர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காந்திபுரம், இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாநகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்தும், குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்தும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவியர்களால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற இந்த மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிறப்பாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்திய 6ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஜெர்ஷினி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் உதவி ஆணையர் கணேசன், மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் குமரேசன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணக்குமார், ஜெகநாதன், ஜெயபார்வதி, பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.