Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் நோக்கில், ஒருமாத கால "மழைநீர் சேகரிப்பு இயக்கம்" என்ற பெயரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
குடியிருப்புகள், வணிகக்கட்டிடங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பார்வையிட்டு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர அனைத்து பயன்பாட்டுக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மழைநீர் சேமிப்பதன் அவசியம் தொடர்பான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அதிநவீன மின்னணு வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 7, 2026 அன்று இந்த பிரச்சார வாகனம் அரசு மருத்துவமனை, உக்கடம் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் சென்று, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து குறும்படம் திரையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
அதே நாளில், கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களின் தலைமையில், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பள்ளிகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும், பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

