Govt Notification
கோவையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
SimpliCity News Team · 5 days ago
Coimbatore: உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் மாபெரும் வெறிநாய்க்கடி தடுப்பூசி (ARV) முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.66க்கு உட்பட்ட பந்தய சாலை பகுதியில் இன்று (28.09.2026) இப்பேரணி நடைபெற்றது. பேரணியானது பந்தய சாலை மீடியா டவர் முன்புறமாக தொடங்கி, ஜி.டி.வீதி, நியூ ஸ்கீம் சாலை வழியாக சென்று மீண்டும் மீடியா டவர் வந்தடைந்தது.
இந்த ஆண்டிற்கான உலக ரேபிஸ் தினத்தின் கருப்பொருள் "STRONGER TOGETHER" (ஒன்றிணைந்து வலிமையாக) என்பதாகும். ரேபிஸ் நோயைத் தடுப்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இக்கருப்பொருள் அமைந்துள்ளது.
உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் PPG College of Pharmacy மற்றும் CSI Bishop Appasamy College of Arts and Science ஆகிய இரு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் ஒன்றாக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் ரேபிஸ் நோய் தடுப்பு, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்திச் சென்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ரேபிஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சமூக நாய்களுக்கு மாபெரும் வெறிநாய்க்கடி தடுப்பூசி (ARV) செலுத்தும் முகாம் நடைபெற்றது. ரேபிஸ் நோயைத் தடுப்பதற்காக சமூக நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நாய் கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. "Stronger Together" என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை முன்னிறுத்தி, அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் 2030-ஆம் ஆண்டிற்குள் ரேபிஸ் இல்லாத நிலையை அடைவதற்கான நடவடிக்கைகளை கோயம்புத்தூர் மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் த.குமரேசன், மாநகர நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் கணேசன், கால்நடை மருத்துவர் மரு.வருண்குமார், உதவி பொறியாளர் பிரகதீஷ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், ஜெயபார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.