Farming
கன்னிவாடி ஆட்டு சந்தையில் வரத்து குறைவால் ஆடுகளின் விலை உயர்வு!
SimpliCity News Team · 08 Sept 2023
திருப்பூர்: தாராபுரம் அடுத்த கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வரத்து குறைந்ததால் விலை கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650க்கு விற்பனை செய்யப்பட்டது இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500 விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் 6,000க்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.