Education
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
SimpliCity News Team · 10 Oct 2026

Coimbatore: கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது, இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.
இப்பட்டமளிப்பு விழா நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர். D.கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். சுந்தர் ராமகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமையேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், பேராசிரியர் டாக்டர். R. ராஜவேல் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, சாதித்த மாணவர்களுக்கும், சாதிக்கும் மாணவர்களுக்கும் கல்விதான் மிகப்பெரும் பேராயுதம் என்றும், கடுமையான உழைப்பு, விடாமுயற்சி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் ஏணிப்படி ஆகும் என்றும் கூறினார். கல்வி என்பது பட்டம் பெறுவதுடன் நின்று விடுவதில்லை, அது ஒரு தொடர் பயணம் என்றும், மனிதநேயம், அறம், ஒழுக்கம், உயர்வு எல்லாவற்றிற்கும் கல்வியே அடிப்படை என்பதை மனதில் பதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு தற்கால சூழலில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது என்றும், அது மானுட சமுதாய வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்றும் R. ராஜவேல் குறிப்பிட்டார். ஆகவே பட்டம் பெறும் மாணவர்கள் கற்ற கல்வி மானுட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பயன்பட தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பட்டமளிப்பு விழா நிகழ்வின் இறுதியாக கல்லூரி முதல்வர் டாக்டர். D. கோபாலகிருஷ்ணன் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசித்தார், உடன் பட்டம் பெற்ற மாணவர்கள் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

