Education
கோவை ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இஸ்ரோ கண்காட்சி 2026: 2,325 மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
SimpliCity News Team · 08 Oct 2026

Coimbatore: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) விண்வெளி கண்காட்சி-2026 (ISRO Expo 2026)இல் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 64 பள்ளிகளைச் சேர்ந்த 2325 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். கோயம்புத்தூர் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 05.10.2026 முதல் 07.10.2026 வரை மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் என 64 பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் 42 அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. PSLV, GSLV, SSLV ராக்கெட் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, அவை செயல்படும் வீதம் குறித்து விண்வெளி மைய நிபுணர்களால் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சந்திராயன், மங்கல்யான் மற்றும் ககன்யான் சார்ந்த விளக்கங்களும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அறிவியலை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடிவினா ஆகியவற்றிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
