போராட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் அறிக்கை மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மாநில அரசு முயற்சியா ?


தமிழர்களின் வீரவிளையாட்டும், பாரம்பரியமிக்கதுமான ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த வேண்டும். அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை உடனடியாக நீக்க வேண்டும். பீட்டா அமைப்பினை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சில நாட்களாக இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழனன்று புதுதில்லி சென்று இந்தியப் பிரதமர் மோடியினை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். ஆனால், இதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும், தற்போது எவ்வித சட்டமும் இயற்ற முடியாது எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு செயல்படுவதாகவும், மாநில அரசு உடனடியாக இதில் தீர்வுகாண வேண்டும் எனவும் தமிழகத்தில் போராட்டம் வலுவடைந்ததைத்தொடர்ந்து தமிழக முதல்வர் புதுதில்லியிலேயே சில வழக்கறிஞர்களைச் சந்தித்து ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த சட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்படும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் உடனடியாக கலைந்துசெல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு எவ்வித இடையூறும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தடைவிதித்து தீர்ப்பளித்தபின்னர், அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட ஏதுவாக, சட்டதிருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை அப்போதைய மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், தமிழக அரசும் தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிக்கை ஒன்றை 7.01.2016 அன்று வெளியிட்டது.

இந்த அறிவிக்கைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தன. இந்த அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையினை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டு, தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்திட ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமரையும், மத்திய அரசையும் நான் வலியுறுத்திவந்துள்ளேன்.

இது தொடர்பாக பாரதப்பிரதமர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, மத்திய அரசு அவசரச்சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.

எனது கருத்துகளை கேட்டுக்கொண்ட பிரதமர், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார். 

மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், பிரதமர், தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று புதுடெல்லியிலேயே தங்கி, ஜல்லிக்கட்டு நடத்திட வழிசெய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்தேன்.

அதன் அடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தினை, ஒரு அவசரச் சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்த வரைவு அவசரச்சட்டம் மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையுடன், இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் இதில் உத்தரவு பிறப்பித்து, அதன் அடிப்படையில் மாநில ஆளுநர் அவசரச்சட்டம் பிறப்பிக்க இயலும்.

இத்தகைய வரைவு அவசரச் சட்டம், நேற்றே புதுடெல்லியில் இருந்தபடியே தயார்  செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, இன்று காலை தமிழக அரசு அதிகாரிகளின் மூலம் அனுப்பி வைத்துள்ளேன். 

மத்திய அரசில் இதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளை பணித்துள்ளேன். குடியரசுத் தலைவரின் உத்தரவு மற்றும் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, இந்த அவசரச்சட்டம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பிறப்பிக்கப்படும். பிரதமர் உறுதியளித்தபடி, அதற்கான முழு ஒத்துழைப்பு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஓரிரு தினங்களில் நடைபெற உள்ளநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், மாணாக்கர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தங்களது போராட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக அரசின் இந்த அறிக்கை மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியாகவே அமைந்துள்ளதாகவும், ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கி எப்போது வாடிவாசலின் கதவுகள் திறக்கப்படுமோ அப்போதே எங்களது போராட்டம் கைவிடப்படும் எனவும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...