கிடப்பில் விமான நிலைய ஓடுதளம் நீட்டிப்புப் பணிகள்

திருச்சி விமான ஓடுதள நீட்டிப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், விமான நிலையத்துக்கு வர வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்டலத்தில் உள்ள சுமார் 10 மாவட்டப் பகுதிகளில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

திருச்சி விமான நிலையத்துக்கு மத்திய அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச அந்தஸ்தை வழங்கியது. ஆனால், சர்வதேச விமான நிலையத்துக்குத் தேவையான ஓடுதளம் திருச்சி விமான நிலையத்தில் இல்லை. இதன் நீட்டிப்புப் பணிகளும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், திருச்சி மட்டுமன்றி, சுற்றுப்புற மாவட்டங்களிலும் பல்வேறு துறைகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம் ஓடுதளம் நீட்டிக்கப்படாத காரணத்தால், இந்த விமான நிலையத்துக்கு வர வேண்டிய வருவாய் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்குச் செல்கின்றன.

இந்தியாவில் உள்ள 17 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் தினசரி சராசரியாக 1.40 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் (70,000) பேர் வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அவற்றின் வழியாக வேறு நாடுகளுக்கோ பயணிக்கின்றனர்.

திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை தவிர வளைகுடா நாடுகளில் துபைக்கு ஒன்று, சார்ஜாவுக்கு ஒன்று என நாளொன்றுக்கு இரு முறை மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருச்சியிலிருந்து இயக்கப்பட்ட சார்ஜா விமானம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு (அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ்) நிறுத்தப்பட்டது. பின்னர், கடந்த செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்துதான் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானப் போக்குவரத்து தொடங்க பல்வேறு நாடுகள் தயாராக இருந்தபோதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், பிற (15-க்கும் மேற்பட்ட சர்வதேச) விமான நிலையங்களிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பன்னாட்டு விமானப் போக்குவரத்தில் தமிழகம் 15 சதவீத பங்களிப்பைத்தான் அளித்து வருகிறது. இதற்குக் காரணம், பன்னாட்டு விமானங்கள் மிக மிகக் குறைவு என்பதுதான். அதிலும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு மிகவும் குறைவு.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் பெங்களூரு தனியார் விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். கடந்த 2015-16-ஆம் ஆண்டில் அந்த விமான நிலையம் வழியாக 33,66,170 பேர் பயணித்துள்ளனர்.

தனியார் விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணி ஒருவர் நிலைய சேவை, பராமரிப்புக் கட்டணமாக விமான டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 2000 வரை செலுத்த நேரிடுகிறது. ஆனால், அரசு விமான நிலையங்களில் ரு. 520 மட்டுமே சேவைக் கட்டணமாகும். அந்த வகையில், பயணி ஒருவருக்கு ரூ. 1,500 மிச்சமாகிறது. வருகை, புறப்பாடு என இரண்டும் சேர்த்து சராசரியாக தினசரி 10 ஆயிரம் பயணிகள் தனியார் விமான நிலையம் வழியாகப் பயணிக்கும்பட்சத்தில் அதற்கு, நாள்தோறும் சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

திருச்சி சர்வதேச விமான நிலயம் வழியாக வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டால், பெங்களூரு தனியார் விமான நிலையத்துக்குச் செல்லும் இந்த வருவாய் திருச்சி விமான நிலையத்துக்கு கிடைக்கும். இதேபோல, கேரள மாநிலத்தின் கொச்சி விமான நிலையத்தை 46,53,948 பேர் பயன்படுத்தியுள்ளனர். இது மொத்தப் பயன்பாட்டில் 10- 15 சதவீதமாகும்.

கேரளத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை 22,17,473 பன்னாட்டு பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இவர்களிலும் 20- 25 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டிய சுமார் 15- 20 லட்சம் (பன்னாட்டு) பயணிகள் பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதுதவிர, சரக்குப் போக்குவரத்துக்கும் வெளிமாநில விமான நிலையங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களின் சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளம் 6,000 அடியாக இருந்து கடந்த 2004-ஆம் ஆண்டு 8,136 அடி நீளத்துக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது அதை மேலும் 12,500 அடி நீளத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்டம் 10,000 அடி நீளமாவது ஓடுதளம் இருந்தால்தான் பெரிய ரக விமானங்களும், சரக்கு விமானங்களும் தரையிறங்க முடியும் என்பதால், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் திருச்சியில் கால் பதிக்கத் தயங்குகின்றன.

ஓடுதளத்துக்கு தேவைப்படும் நிலம் மொத்தம் 510 ஏக்கர். இதில், அரசு மற்றும் ராணுவ நிலம் 164 ஏக்கர் போக, எஞ்சியுள்ள 346 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இவற்றில் தரிசு நிலங்களும், விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் அடக்கம்.

ராணுவ இடத்தை அளிப்பதற்கான அனுமதி கிடைக்கும் தருவாயில் உள்ளது. எஞ்சிய 346 ஏக்கர் நிலம்தான் பிரச்னையாக உள்ளது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...