கோவை : உண்மையான நண்பர்கள் என்று நினைத்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், கோவையில் வாங்கப்பட்ட ஹார்மோனியம் மட்டுமே தனது ஒரே நண்பன் என இசைஞானி இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.
கோவை : உண்மையான நண்பர்கள் என்று நினைத்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், கோவையில் வாங்கப்பட்ட ஹார்மோனியம் மட்டுமே தனது ஒரே நண்பன் என இசைஞானி இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'இசைஞானியுடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, 'வெற்றி தோல்விகளை கணக்கிடாமல், வாழ்க்கை என்பது நீரோட்டம் போன்று நிலையற்றது என்பதை உணர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்' என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தனது இசைப்பயணம் குறித்து அவர் பேசுகையில், ”இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், எந்த படத்திற்கும் 3 நாட்களுக்கு மேல் பின்னணி இசை கோர்ப்புக்கு எடுத்துக் கொண்டதில்லை. உண்மையான நண்பர்கள் என நினைத்தவர்கள் சிலர் என்னை ஏமாற்றிச் சென்றுவிட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை உக்கடம் பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட ஹார்மோனியம் இசைக்கருவி மட்டுமே தனது ஒரே ஒரு உண்மையான நண்பன்," என்றார்.

மேலும், பால்கி இயக்கத்தில் வெளிவந்த 'பா' திரைப்படத்தின் இசையமைப்பு பணிகள் குறித்து மாணவர்களிடம் உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார். பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்கு இளையராஜா கலகலப்பாக பதிலளித்தார்.
'லைவ் ரெக்கார்டிங் மற்றும் டிஜிட்டல் ரெக்கார்டிங் இவற்றில் எது சிறந்தது..?' என மாணவி ஒருவர் கேட்டதற்கு, 'எந்த ரெக்கார்டிங்காக இருந்தாலும், ரெக்கார்ட் (சாதனை) படைக்கும் விதத்தில் இருக்க வேண்டும்' என இளையராஜா பதிலளிக்க கைதட்டலில் அரங்கம் நிறைந்தது. மேலும், நல்ல இசை மனித உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும். அப்படிப்பட்டது நம் மண்ணின் இசை. அதோடு தான் இத்தனை ஆண்டுகாலம் பயணித்து வருகிறேன், என்றார்.

மாணவர் ஒருவர் தனது கற்பனையான காதல் காட்சியைக் கூற, அடுத்த சில விநாடிகளில் புதிதாக ஒரு ராகத்தை வாசித்து, வரி அமைத்து பாடிக் கட்டிட பார்வையாளர்கள் அசந்து போய்விட்டனர். நிறைவாக, அவதாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தென்றல் வந்து தீண்டும் போது' என்ற பாடலை நெஞ்சுருகி இளையராஜா பாடியதை, மூன்று தலைமுறை ரசிகர்களும் கண்களை மூடி ரசித்தனர்.
