நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டாபரி பழங்களுக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டாபரி பழங்களுக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பசும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் தேயிலை விவசாயத்திற்கு மாற்றாக கொய்மலா் சாகுபடியை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் சூறாவளி காற்றினால் பசுமை குடில்கள் சேதமடைந்து விடுவதால் பல லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு மாற்றாக நல்ல லாபம் ஈட்டித் தரும் ஸ்டாபெரி பழம் விவசாயத்தில் ஈடுபட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். புனேயில் இருந்து தருவிக்கப்படும் ஒரு நாற்றில் இருந்து ஆண்டுக்கு ஒரு கிலோ வரை ஸ்டாபெரி பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வெளிசந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ. 250 முதல் 270 வரை விற்கப்படுகிறது. உற்பத்தியாளர்களுக்கு ரூ. 70 முதல் ரூ. 80 வரை இலாபம் கிடைக்கிறது.

மேலும், இந்த விவசாயத்திற்கு அதிக பணியாட்களும் தேவையில்லை என்பதால் இவற்றைப் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புனேவில் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இதன் சீசன் என்பதால் இந்த மாதம் முடிந்ததும், குன்னூரில் விளையும் ஸ்டாபெரி பழத்திற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த ஸ்டாபெரி பழங்கள் சென்னை, கோவை போன்ற பெருநகர் பகுதிகளுக்கு அதிக அளவு விற்பனை செய்யப்பட்டாலும், நல்ல தரமான பழங்களை துபாய் போன்ற வெளிநாடுகளில் அதிகம் விரும்புகின்றனர். இதனால், தரமான பழங்களை உற்பத்தி செய்தால் வெளிநாடுகளில் அதிகளவு கிராக்கி ஏற்படுவதோடு, கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.