கோவை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களை முன்னிட்டு பூ மற்றும் பூஜை பொருட்களை வாங்க கோவை பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
கோவை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களை முன்னிட்டு பூ மற்றும் பூஜை பொருட்களை வாங்க கோவை பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

எந்த ஒரு பண்டிகை நேரத்திலும் டவுன்ஹால், காந்திபுரம் ஆகிய பகுதிகளுக்கு அடுத்தபடியாக பூ மார்க்கெட் பரபரப்பாக இருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் தற்போது கொண்டாடப்பட இருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளுக்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வரும் சூழலில், தற்போது பூ மார்க்கெட் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மலர்ந்த பூக்கள் தற்போது பூ மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ளன. சாமந்தி கோழிக்கொண்டை, மல்லிகை, மரிக்கொழுந்து, அல்லி, பன்னீர் ரோஜா ஆகிய பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் அய்யப்பன் கூறுகையில், "வழக்கமாக பூஜை தினங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி, இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த இரு தினங்களும் பூ மார்க்கெட் பகுதி பரபரப்பாகவே இருக்கும்.

பொதுவாக இந்த தினங்களில் கூடை கணக்கில் தான் பூக்களை விற்பனை செய்வோம். அவ்வாறாக இருக்கும் பொது கூடை ரூ.200 முதல் ரூ.1000 விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். இது போன்ற விஷேச காலங்களில் எங்கள் துறையில் அனைத்து வகை, தொழிலாளர்களுக்கும் கூலி அதிகம். அதனாலேயே விலை சற்று அதிகரித்துள்ளது.
பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வரும் நபர்கள் தங்களுடன் ஒரு துணிப்பையை எடுத்து வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்." என்றார்.
"இந்த விஷேச தினங்களில் இரவு பகலாக உழைத்தால் மட்டுமே சற்று லாபம் சம்பாதிக்க முடியும். மழை இல்லாமல் இருந்தால் வியாபாரம் சற்று நன்றாக இருக்கும்." என்றார் பூ வியாபாரி ஜெயந்தி.

"மேட்டூரில் இருந்து கரும்புகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். தற்போது ரூ.120 முதல் 150 வரை கரும்பு விற்பனையாகி வருகிறது. மழையால் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது." என்றார் வியாபாரி அய்யப்பன்.

பொரி வியாபாரி வெள்ளியங்கிரி கூறுகையில், " மழை இல்லாமல் இருந்தால் தான் வியாபாரம் நன்றாக இருக்கும். தர்மபுரி, கீரனூர், ஈரோடு, செங்கப்பள்ளி போன்ற பல இடங்களில் இருந்து வெவ்வேறு வகையான பொரிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இன்று முதல் விழாக்கால வியாபாரம் தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு வியாபாரம் நீடிக்கும்." என்றார்.

மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு போலீசார் அங்கு போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.