சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி வரலாற்று தீர்ப்பு அளித்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி வரலாற்று தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். தீவிரமாக நடந்து வரும் அந்த போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அவசர ஆலோசனை கூட்டத்தை திருவனந்தபுரத்தில் நேற்று நடத்தியது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி வரும் அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த சமரச தீர்வு காணப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில், 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நடை திறக்கப்படுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண் பத்திரிகையாளர்களைக் கூட போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழலில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்போம். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். சபரிமலையின் பெயரில் வன்முறை ஏற்படுவதை என் அரசு அனுமதிக்காது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.