நீலகிரி : பெட்ரோல், டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் நிலவி வரும் நிலையில், 'மீடு' (Metoo) பிரச்சனையைப் பெரிதுபடுத்துவது பல பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காகவே என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி : பெட்ரோல், டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் நிலவி வரும் நிலையில், 'மீடு' (Metoo) பிரச்சனையைப் பெரிதுபடுத்துவது பல பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காகவே என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
நீலகிரி மலை மாவட்டத்தில் உள்ள பாண்டியாறு, புன்னம்புழா ஆகிய ஆறுகளின் நீர் சாளியாறு வழியாக சுமார் 15 டி.எம்.சி. வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நீர் வீணாகக் கடலில் கலப்பதை உணர்ந்து மத்திய அரசு கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் அறிவித்த நதிகள் இணைப்பு திட்டம் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. தற்பொழுது, ஆட்சி முடியும் தருவாயிலாவது, இந்த நதிநீர் இணைப்பு திட்டத்தை பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தின் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் மதுகொள்கை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு முன்னோட்டமாக டிசம்பர் 24-ம்தேதி பெரியார் நினைவு நாளில் சென்னை பெரியார் திடலிலுள்ள நினைவிடத்தில் கள்ளை கைகளில் ஏந்தி கள்ளுக்குள்ள தடையை நீக்குமாறு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
கள்ளுக்கு தடையை விலக்கும் வகையிலும், எடப்பாடி அரசுக்கு சவால் விடும் விதமாகவும், வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதி சென்னையில் அசுமேத யாகம் நடத்தப்படும்.
பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தொடும் என அஞ்சப்படும் நிலையில், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், இந்திய நாட்டிற்கு நெருக்கடியை தீர்க்கும் விதமாகவும், எத்தனாலை பயன்படுத்த முன்வர வேண்டும். அதேபோல், சர்க்கரை ஆலைகளின் சரிபாதியை எத்தனால் ஆலைகளாக மாற்றுவதன் மூலம் கரும்பு சாகுபடிக்கும் ஆலைகளுக்கும் வந்திருக்கும் நெருக்கடியைத் தீர்க்க முடியும்.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி ஏற்படும் போது பெருமளவு தேக்கமடைந்து விடுகிறது. இதற்கு, ஓட்கா மதுவை தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். இதன்மூலம், ஏற்படும் நெருக்கடியை விவசாயிகள் சமாளிக்க முடியும்.
1969 முதல் சினிமா நடிகர்கள் தான் ஆட்சி அமைத்து வருகின்றனர். இவர்களுக்கு மட்டும் தான் சிறப்பு தகுதி மற்றும் ஆளுமை இருப்பதாகக் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழ்நாட்டு மக்களின் அறியாமையை அறுவடை செய்யும். நாட்டில் பெட்ரோல், டிசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், Metoo பிரச்சனையை பெரிதுபடுத்துவது பல பிரச்சனைகளை திசைதிருப்புவதற்கே ஆகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.