கோவை: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு போலி நியமன ஆணை வழங்கிய நபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு போலி நியமன ஆணை வழங்கிய நபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஊரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (32). இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் வேலை செய்து வருவதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். அதேபோல கல்லூரியில் லேப் டெக்னீசியன் அலுவலக ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்தப் பணியில் சேர்த்து விடுவதாகவும் கூறி மதுரை, தேனி, கம்பம், நெல்லை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பலரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.
மேலும், கல்லூரி தாளாளர் பெயரில் கல்லூரி முத்திரையைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு வேலைக்கான நியமன ஆணையை வழங்கி உள்ளார். கல்லூரி தாளாளர் அனுமதியுடன் இந்த உத்தரவு வழங்கப்படுவதாகவும் கடந்த 11-ஆம் தேதி முதல் பணியில் சேர வேண்டும் எனவும் ஒரு மாதம் தாமதமாகிவிட்டதால் அதற்கான நிலுவைத் தொகை போனஸ் வழங்கப்படும் என்றும் அவரிடம் வேலைக்கு பணம் கொடுத்தவர்களுக்கு ஈமெயிலில் தகவல் அனுப்பி உள்ளார்.
இதில் ஒருவர் தனது நியமன உத்தரவு குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்தார். அதில் கல்லூரியில் வேலைக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை என்று கூறினர். அதிர்ச்சி அடைந்த அவர் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட பணி நியமன ஆணையை அனுப்பினார்.
அப்போது அந்த நியமன ஆணை போலியானது என தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில் சரவணக்குமார் இதேபோல மேலும் சிலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி குனியமுத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சரவணக்குமார் மீது மோசடி போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் சரவணக்குமார் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, பி.எச்.டி ஆகிய முதுகலைப் பட்டங்களைப் பெற்று மதுரை கொடைக்கானல், உத்தமபாளையம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது தெரியவந்தது.
அதேபோல சரவணக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியர் பணிக்காக நேர்காணலுக்கு வந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை கல்லூரியில் இருந்து வந்த கடிதத்தில் உள்ள முத்திரையைப் பயன்படுத்தி அதனை போலியாக உருவாக்கி பணம் பறிக்க திட்டமிட்டு மோசடிகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.
பணம் சுருட்டும் நோக்கத்தில் போலி இ-மெயில் ஐடி மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணி நியமன ஆணை அனுப்பத் திட்டமிட்டு முதல் முயற்சியிலேயே போலீசில் சரவணக்குமார் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.