கோவை : சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
கோவை : சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
கோவையில் உணவுப் பற்றாக்குறையை தவிர்க்கும் விதமாக, மாநகரில் உணவு வீணாவதைத் தடுக்க மாவட்ட உணவு வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 16-ம் தேதி சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ‘பசியாற்றும் இளம் உள்ளங்கள்’ என்ற பிரச்சாரம் மற்றும் சுமார் 1,000 ஆதரவற்ற மக்களின் பசியினை போக்கும் வகையிலான மாபெரும் உணவு வழங்கும் நிகழ்ச்சி கோவை உணவு வங்கியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. காந்திபுரம் அருகே உள்ள நியூ சித்தாபுதூர் உயர்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மேலும், ‘பசியாற்றும் இளம் உள்ளங்கள்’ பிரச்சாரத்திற்கான லோகோவையும் அவர் வெளியிட்டார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- உணவுகள் வீணடிப்பதை தவிர்ப்பதற்கான இந்த முயற்சியில் மாணவர்களின் பங்கு அதிகமானது. இந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் கோவை உணவு வங்கி மற்றும் அதன் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜியின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவர்களது முயற்சியால் கோவை மாநகர் பசியில்லா நகரமாக மாறும், இவ்வாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து, ‘அன்புடன் சமையல்' என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்த அறம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் நிறுவனர் லதா சுந்தரம், இதற்கான லோகோவையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், “இளம் வயதில் தானம், மகிழ்வான பிளேட் சவால், அன்புடன் சமையல் போன்ற மூன்று முக்கிய பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இளம் வயதில் தானம் என்பது கல்லூரிகளில் உணவு வீணடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், கல்லூரிகளில் உணவு வீணடிக்கப்படுகிறதா என்பதை உணவு மையங்களைக் கொண்டு கண்காணிக்க உள்ளோம். மகிழ்வான பிளேட் சவால் என்பது ஒரு நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களின் போது வழங்கப்படும் உணவு தட்டுகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களால் அறிவுறுத்தப்படுவதே ஆகும். அன்புடன் சமையல் என்ற பிரச்சாரமானது, உணவு தேவைப்படுவோருக்கு, தானமாக வழங்க நினைப்பவர்களே சமைத்து கொடுப்பதாகும்,”இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியில், சுமார் 1,000 ஆதரவற்ற மக்களின் பசியினை போக்கும் வகையில் உணவுகள் வழங்கப்பட்டன.