கோவை : கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 60 சவரன் நகையும், ரூ. 1.5 லட்சம் ரொக்கமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 60 சவரன் நகையும், ரூ. 1.5 லட்சம் ரொக்கமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கரும்புக்கடை வள்ளலார் நகரை சேர்ந்த சேட் என்பவர் கேபிள் டிவி ஆப்ரேட்டராக உள்ளார். அவர் கடந்த 11-ம் தேதி காலையில் மனைவியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மறுநாள் மாலை அருகில் வசிக்கும் சேட்டின் மகள், வீட்டில் விளக்கு போடுவதற்காக வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அவர் அருகிலிருந்தவர்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனையிட்ட போது, வீட்டின் முதல் மாடியின் ஓர் அறையில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 60 சவரனுக்கும் அதிகமான நகைகள் மற்றும் சுமார் ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், உண்மையாக எவ்வளவு ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருக்கும் என்பது முழு விசாரணையில் தான் தெரியவரும்.

அதேபோல, கொள்ளையர்கள் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை திருத்தம் செய்ததுடன், அதனை திசைதிருப்பி வீட்டிற்குள் வந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், போலீசார் வீட்டில் பதிவான கைரேகைகளை அடிப்படையாகக் கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, வீட்டில் சரியாக பணம் மற்றும் நகைகள் வைத்திருக்கும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து பணம் நகைகளை கொள்ளையடித்து இருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் யாரேனும் தெரிந்த நபர்களே ஈடுபட்டிருப்பார்கள் என்ற கோணத்திலும் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.