கோவை : தடாகம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்திய நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : தடாகம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்திய நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்குக் காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. நேற்று நள்ளிரவு வரப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு யானைக் கூட்டங்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. குறிப்பாக, செல்வராஜ் (55) என்ற விவசாயியின் விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள், வாழைமரங்கள், தக்காளி, கத்தரிக்காய், சோளம் மற்றும் தென்னை மரங்கள் போன்றவற்றை நாசம் செய்தன. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், வனத்துறையின் வேட்டைத் தடுப்பு காவலர்கள் குடியிருப்புகளுக்கு புகும் காட்டு யானைகளை விரட்டுவதில் தாமதமாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முன்னதாக, விவசாயப் பண்ணைக்குள் புகுந்த யானைகள் மேற்கூரைகள் மற்றும் வீடுகளை சூறையாடின. எனவே, காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
