சென்னை: சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி பல அதிகாரிகளை நாட்டுக்கு கொடுத்த சங்கர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி பல அதிகாரிகளை நாட்டுக்கு கொடுத்த சங்கர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாய குடும்பத்தில் பிறந்த சங்கருக்கு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்பது கனவு. பள்ளிப் படிப்பை பி.எஸ்.சி அக்ரி படிப்பில் சேர்ந்த இவர் அங்கு வைஷ்ணவி என்ற பெண்ணை ராக்கிங் செய்துள்ளார். இதன் காரணமாக, இவர் கல்லூரியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக இவரது தாத்தா இவரிடம் கடைசி வரை பேசாமலே மரணம் அடைந்தார்.
கனவும்-காதலும்
இதனால், மிகுந்த மன உளைச்சலடைந்தார் சங்கர். அதனைத் தொடர்ந்து அவரது வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. நல்ல மாணவனாக கல்லூரிக்கு சென்று தீவிரமாக படிக்கத் தொடங்கினார். இவரது மாற்றத்தை பார்த்த அந்த ராக்கிங் செய்யப்பட்ட பெண் வைஷ்ணவி இவர் மீதே காதலில் விழுந்துள்ளார். அதன்பின் சங்கரும் வைஷ்ணவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் இவருக்கு ஐ.ஏ.எஸ் கனவும் இருந்துள்ளது.
மொத்தம் 4 முறை சிவில் சர்விஸ் தேர்வு எழுதியுள்ளார். இதில் இரண்டு முறை இறுதிச்சுற்று வரை சென்றார். ஆனால், ஒரு முறை கூட தேர்வாக முடியவில்லை. இருந்த போதும் மனம் தளரவில்லை சங்கர். அம்மா கொடுத்த வெறும் 720 ரூபாயை வைத்துக்கொண்டு சென்னையில் தனது பெயரிலேயே அகாடமி தொடங்கினார்.
14 ஆண்டுகள்
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி . இப்போது தமிழகத்தின் சிறந்த ஐ.ஏ.எஸ் அகாடமிகளுள் ஒன்று சங்கரின் அகாடமி. இத்தனை ஆண்டுகள் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமை பணி அதிகாரிகளை இந்த அகாடமி உருவாக்கியது. தொடங்கிய சிறிது காலத்திலேயே சென்னையின் நம்பர் ஒன் ஐ.ஏ.எஸ் பயிற்சியிடமாக மாறியது சங்கரின் அகாடமி. இந்த பயிற்சி நிறுவனத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இயல்பாகவே அன்பான குணமுடைய சங்கர் பலரது மனதையும் கவர்ந்தவர். நொடிந்து போனவர்களை தனது பேச்சால் கரை தேற்றியவர் சங்கர். ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர் நேற்று இரவு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றிவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வந்த வண்ணம் உள்ளனர்.