நீலகிரி : உதகை அருகே தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கிய சம்பவம் சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி : உதகை அருகே தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கிய சம்பவம் சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர் கதையாகவே உள்ளது. குறிப்பாக, கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களிலும், விளை நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கி வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உதகையை அடுத்த பாலகொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு, மணியட்டி செல்லும் பகுதியில் உள்ள ஓடேரி கிராமத்தில் இன்று மதியம் லீலா (45) என்பவர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி ஒன்று அவரை கடுமையாகத் தாக்கியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்ட சக தொழிலாளர்கள் கரடியை விரட்டியடித்தனர். பின்னர், படுகாயம் அடைந்த லீலாவை மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.