கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், வாய்க்கால்கள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நகரில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணிகளை கோவை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் மேற்கொண்டனர்.
இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக மாநகராட்சி எல்லைக்குள் உள்ள குளங்களுக்கு அருகில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தி, குடியிருப்பு வாசிகளுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கவுண்டம்பாளையம் சாலை, ஜீவா நகர் மற்றும் வாலாங்குளத்தை ஒட்டி வசித்து வந்தவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, காந்திபூங்காவை அடுத்துள்ள முத்தண்ணன் குளம் மற்றும் பல்வேறு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 3000-க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணிகள் இம்மாதத்திற்குள் மேற்கொள்ள கோவை மாநகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.