கோவை: பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சாலையில் வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு மினி லாரியில் சென்று கொண்டிருந்த மலைவாழ் மக்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சாலையில் வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு மினி லாரியில் சென்று கொண்டிருந்த மலைவாழ் மக்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ள குருமலை காட்டு பட்டியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 15 பேர் கோட்டூர் சந்தையில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு நேற்று மாலை மினி லாரியில் தங்களது ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்படி வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் சன்னாசி, மல்லப்பன், ராமன் மற்றும் வெள்ளையன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பலியாகினர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குருமலை காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் வாரம் ஒருமுறை இவர்கள் 35 கிலோ மீட்டர் நடந்து சென்று தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறு பொருட்களை வாங்கிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத அரசின் மெத்தனப்போக்கால் ஐந்து அப்பாவிகள் உயிரிழந்ததாக வேதனை தெரிவிக்கின்றனர் மலைவாழ் மக்கள்.