கோவை : கோவையில் ஸ்கிம்மர் கருவியை நாடு முழுவதும் விற்பனை செய்துவரும் நபரில் ஒருவரை மும்பை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : ஸ்கிம்மர் என்ற ஏ.டி.எம் இயந்திரத்தில் மோசடிக்கு பயன்படுத்தப்படும் கருவியை நாடு முழுவதும் விற்பனை செய்து வரும் நபரில் ஒருவரை கோவையில் வைத்து மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏ.டி.எம் -களில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னிக்கல் கொள்ளையர்களையும் அதன் நெட்வர்க்கில் உள்ள அனைவரையும் கூண்டோடு பிடிக்க நாடு முழுவதும் உள்ள போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும் ஆங்காங்கே இன்னும் வாடிக்கையாளர்களின் பணம் வீணாக நவீன திருடர்களால் ஸ்கிம்மர் கருவியை கொண்டு திருடப்பட்டு தான் வருகிறது.
மேலும், ஸ்கிம்மர் இயந்திரங்களை நாடு முழுவதிலும் விற்பனை செய்யும் நபர் தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் ஸ்கிம்மர் இயந்திரம் வினியோகித்த ரமேஷ் கோவையில் பதுங்கியிருப்பதாக மும்பை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை வந்த மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரமேஷை கைது செய்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட ரமேஷை மும்பை கொண்டு சென்று விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கோவையில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படியிருக்க சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தியது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
ஆக கோவையில் ஏற்கனவே கைதாகியிருக்கும் நபர்களுக்கும் தற்போது மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.