சென்னை : சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற காவல் விதிக்கமுடியாது என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற காவல் விதிக்கமுடியாது என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது, சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். பின்னர், அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட வழக்கில், ஆளுநர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி ஆளுநர் மாளிகை சார்பில் செயலாளர் ராஜகோபால் அளித்த புகாரின் பேரில், ஜாம்பஜார் போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தனர். நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களைப் பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. வெளி ஆட்கள் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. மேலும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப இயலாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.