கோவை : தொடர் மழை காரணமாக கோவை பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்தும், விலை சரிந்தும் காணப்படுகிறது. இருப்பினும், மழையின் காரணமாக பூக்கள் விரைவில் அழுகி விடுவதால் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை : தொடர் மழை காரணமாக கோவை பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்தும், விலை சரிந்தும் காணப்படுகிறது. இருப்பினும், மழையின் காரணமாக பூக்கள் விரைவில் அழுகி விடுவதால் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை பூமார்க்கெட்டில் 172 தினசரி விற்பனை கடைகள் உள்ளன. தினமும் 30 முதல் 40 டன் பூக்கள் வருகின்றன. மல்லிகை, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா, செண்டு பூ, துளசி, தாமரை பூ ஆகியவை பிரதானமாக விற்பனை நடைபெறும். குறிப்பாக, விசேஷ நாட்களில் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், பூக்கள் வரும் போது மழையில் நினைந்து வருவதால் தரமில்லாமல் இருப்பதாகவும், பாதி பூக்கள் சீக்கிரம் ஒரே நாளில் அழுகி விடுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டு விற்பனை சரிவு, விலை சரிவு என்கிற பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் அய்யப்பன் கூறுகையில், "பொதுவாக புரட்டாசி மாதத்தில் விசேஷம் போன்றவை பெரிதாக இருக்காது. இதன் காரணமாக வியாபாரம் மந்தமாக தான் இருக்கும். ஆனால், தற்போது பூக்கள் தரமில்லாமல் வருவதாலும், அழுகி போவதாலும் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனர்," என்றார்.

கோவை பூமார்க்கெட்டுக்கு தினமும் சத்தியமங்கலம், காரமடை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மதுரை மாவட்டம் நிலக்கோட்டை, ஒசூர், ராயக்கோட்டை பகுதியிலிருந்து பூக்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
172 கடைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தினமும் 6 முதல் 8 டன் வரை கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இது விசேஷ நாட்கள், பூக்களின் பருவநிலை மாற்றத்தைப் பொருத்து மாறுபடும்.
இது குறித்து பூக்கடை நடத்தி வரும் ராமச்சந்திரன் என்பவர் கூறுகையில், "கிலோ ரூ. 180-க்கு விற்பனையான செவ்வந்தி பூ இன்று ரூ. 40-க்கும், ரூ. 700-க்கு விற்ற மல்லிகை பூ இன்று ரூ. 250-300 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதேபோல, சம்மங்கி ரூ. 120-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 40-க்கும், ரோஜா ரூ. 120-க்கு விற்ற நிலையில், இன்று ரூ. 40-க்கும், செண்டு பூ ரூ. 70-க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ. 30-க்கு மட்டும் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் இது தொடர் கதையாகிதான் வருகிறது," என்றார்.

பூக்களை தினமும் கோவில்களுக்கும், அலுவலகங்களும் சாமி கும்பிட வாங்கிச் செல்லும் மக்களுக்கு தற்போது இந்த விலை சரிவு பயன்பெற்றாலும், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.
இது குறித்து வாடிக்கையாளர் சோமசுந்தரம் கூறுகையில், "தினமும் வீட்டில் உள்ள சாமி படத்திற்கும், வெள்ளிக்கிழமை கோவிலுக்கும் பூ வாங்குவதும் வழக்கம். மழை காரணமாக பூக்கள் பூச்சிகள் தாக்கியது போல் உள்ளது விலை குறைவாக இருந்தாலும் மனம் நிறையவில்லை," என்றார்.
பூக்களை தினமும் விற்பனை செய்து விடுவதால் குடோன்கள் பெரிதும் தேவைப்படாது. ஆனால், இது போன்ற மழை காலங்களில் பூக்கள் அழுகாமல் இருக்க குடோன்கள் அமைத்து பூக்களை அரசாங்கம் பராமரித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.