கோவை: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சட்ட ரீதியாக கையாளுவது குறித்து ரயில்வே காவலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சட்ட ரீதியாக கையாளுவது குறித்து ரயில்வே காவலர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கினை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். உடன் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் இருந்தார்.

கருத்தரங்கில் சைலேந்திரபாபு பேசுகையில், "தமிழகத்தில் ரயில்களில் தினமும் 25 லட்சம் பயணிகள் பயணிக்கின்றன. அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான். அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து முதல் நடவடிக்கை எடுக்க வேண்டியது ரயில்வே காவல்துறை தான்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது எப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், எந்த சட்டத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம், புலன் விசாரணை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து தான் இந்த கருந்தரங்கு.
கடந்த ஆண்டு (2017) மட்டும் 1940 குழந்தைகளை ரயில்நிலையங்களில் இருந்து மீட்டுள்ளோம். இந்தாண்டு 1,495 குழந்தைகளை மீட்டுள்ளோம். அதே போல் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் இந்தாண்டு (2018) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 2 பேருக்கு மூன்றாண்டு தண்டனையும் பெற்று கொடுத்துள்ளோம்.
இதன் மூலம் தமிழக ரயில்வே காவல்துறையினரை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். புகார் கொடுத்தால் கண்டிப்பாக அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளன.

புகார் கொடுப்பவர்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். ரயில்வே காவல்துறையினரை மக்கள் பெரிதும் நம்புகின்றனர். 150 ஆண்டுகளில் காவல் துறையினரின் அணுகுமுறை பலமடங்கு மாறியுள்ளது.
காவல்துறைக்கு அடித்தளமே பயிற்சிதான். பயிற்சி பெற்றுத்தான் வந்திருப்போம். இருந்தாலும் தொடர் பயிற்சிகளால் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியும். இந்த கருத்தரங்கு பயிற்சியில் ரயில்வே காவல்துறையினர் பயன்பெற வேண்டும். சென்னையில் புதிதாக 200 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 90 மகளிர் காவல்துறையினர்." என்றார்.
இந்த கருத்தரங்கில் கோவை பகுதிகளை சார்ந்த ரயில்வே காவல்துறையினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.