கோவை: பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள செல்போன் கடையின் ஒன்றின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர் ஒருவர் சுமார் 30,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை: பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள செல்போன் கடையின் ஒன்றின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர் ஒருவர் சுமார் 30,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பாரதியார் சாலையில் ஆதவன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் செல்போனின் உதிரிப்பாகங்களை மொத்தம் மற்றும் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
இவர் நேற்று வழக்கம் போல பணி முடிந்தவுடன் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலையில் கடையை திறந்து பார்த்த கொள்ளைச் சம்பவம் குறித்து தெரியவந்தது. இதனால் அவர் கோவை பந்தய சாலை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணை செய்த போலீஸார், கடைக்குள் இருந்த சி.சி.டி.வி காட்சியையும் ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் முகத்தில் துணியை மூடியபடி கொள்ளையன் ஒருவன் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே வந்து திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதேபோல அந்த கடையில் இருந்த மற்ற சி.சி.டி.வி காமிராக்கள் கொள்ளையனால் மறைக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு குற்றவாளியின் முக அடையாளங்களை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.