கோவை : கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மேட்டுப்பாளையம் வந்தடைந்த பேரிடர் மீட்பு குழுவினரை அதிகாரிகள் வரவேற்றனர்.
கோவை : கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மேட்டுப்பாளையம் வந்தடைந்த பேரிடர் மீட்பு குழுவினரை அதிகாரிகள் வரவேற்றனர்.
தமிழகத்திற்கு நாளை அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வாணிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதையடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உஷார்படுத்தி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும் என அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, மழை சேத நடவடிக்கைகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட குழு மேட்டுப்பாளையம் வந்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதிக தண்ணீர் வரத்து ஏற்பட்டு கரையோரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பகல்நேரம் என்பதால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டு பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல, பவானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டமான சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
எனவே, நாளை அதிக அளவிலான மழைப்பொழிவு இருக்கும் என கணித்துள்ளதால், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க தற்போது பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. கேப்டன் தலைமையில் 25 வீரர்கள் தகுந்த உபகரணங்களுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஏற்படும் நிலச்சரிவு போன்ற பிரச்சினைகளை தீர்க்க வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைகளும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் இன்று பேரிடர் மீட்பு குழுவினை வரவேற்ற அவர், மக்கள் எவ்வித அச்சமும் படத் தேவையில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.