நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக, வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே ஓட்டுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக, வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே ஓட்டுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக உதகை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கோத்தகிரியில் உள்ள மலைப்பாதையிலும், குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

மேலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்து விடுவதால், வாகனங்களை இயக்குவதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இயற்கையின் அழகை ரசிக்க வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மேகமூட்டங்களைக் காண்பதற்காக காட்சி முனைகளுக்கு சென்றாலும், அவ்வப்போது ஏற்படும் பனி மூட்டத்தின் காரணமாக, அதனை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.