நீலகிரி : வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு மழையின் தாக்கம் கூடலூர் பகுதியில் அதிகம் இருந்த நிலையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கொலக்கம்பை போன்ற பகுதிகளில் இந்த மழையின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குன்னூர் பகுதியில் அதிகம் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மூடுபனியும் உருவானது.

இந்த நிலையில், இன்று மதியம் திடீரென பலத்த மழைப் பெய்யத் தொடங்கியது. சில மணிநேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் காரணமாக ஆறுகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், தமிழகம், நீலகிரி மாவட்டங்களில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, குன்னூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அரவங்காடு அருகே மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, உதகை ஹில்பங்க் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் மைசூர் செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.