கோவை: கோவை மாநகரின் புதிய காவல் ஆணையராக சுமித் சரண் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவை: கோவை மாநகரின் புதிய காவல் ஆணையராக சுமித் சரண் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த பெரியய்யா மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றதையடுத்து தற்போது சுமித் சரண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, இன்று மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவர், கோப்புகளில் கையொப்பமிட்டு ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுமித் சரண் பீகார் மாநிலம் பாட்னா-வை சேர்ந்தவர். இவரது தந்தை உத்திரபிரதேசம் மாநிலத்தில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 1997-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ் பதவியை பெற்ற இவர், கடந்த 1999-ல் ஸ்ரீவில்லிப்புத்தூரில் கூடுதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆகவும், சி.பி.ஐ.,யில் உயர் பொறுப்பிலும், திருநெல்வேலியில் டி.ஐ.ஜி.,யாகவும் மற்றும் விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் காவல் ஆணையாளராகவும் பொறுப்பு வகித்தார்.
ஆணையராக பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மழை எச்சரிக்கை உள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் உடனடி சேவைகளை செய்ய அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தால் உடனடியாக அவசர உதவிகள் கொடுக்க காவல்துறை தயார் நிலையில் உள்ளது.
ஆகவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க தனி கவனம் செலுத்தப்படும். காவல்துறையில் அபராதங்களை 100 சதவீதம் மின்னணு முறையில் வசூலிக்கப்படும். திருட்டு மற்றும் சங்கிலி கொள்ளையர்களைப் பிடிக்க கண்காணிப்பு காமிராக்கள் இன்னும் அதிகப்படுத்த வேண்டும்." என்றார்.