கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியாருடன் இணைந்து 100 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியாருடன் இணைந்து 100 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை சி.ஐ.டி.யு மில் தொழிலாளர் சங்க அலுவலகத்தில், சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 100 இடங்களில் 300 சதுர அடி பரப்பளவுகளில் தண்ணீர் ஏ.டி.எம் அமைத்து தண்ணீர் விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. போர் போட்டு நிலத்தடி தண்ணீரை எடுத்து தனியார் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

மாநகராட்சியின் இந்த முடிவு கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். சூயஸ் நிறுவனம் மூலம் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய 1500 பொது குழாய்களை மூடிவிட்டு அங்கு இந்த தண்ணீர் ஏ.டி.எம் அமைப்பது என்பது சரியானதல்ல.
தண்ணீருக்காக தனியார் நிறுவனங்களை பொது மக்கள் நம்பி இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றது. சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம், சென்னை கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் போன்றவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் 15 மாணவர்கள் இருக்கும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
வானிலை மையம் 12 சதவீதம் வடகிழக்கு பருவ மழை கூடுதலாக இருக்கும் என கூறியுள்ளது. வானிலை அறிவிப்பு வெளியாகி கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு பின்பாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு மழை முன்னெச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், வேதாந்தா நிறுவனம் இரண்டாவது யூனிட்டை திறக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தஞ்சை சாஸ்திர பல்கலை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்பதில் அரசு பாரபட்சம் காட்டுகின்றது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டி பேசினார்.