திருப்பூர் : தாராபுரம் அருகே உள்ள செங்கல் சூலையில் 5 ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாக இருந்த 6 குடும்பத்தைச் சேர்ந்த 23 பேரை தாராபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
திருப்பூர் : தாராபுரம் அருகே உள்ள செங்கல் சூலையில் 5 ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாக இருந்த 6 குடும்பத்தைச் சேர்ந்த 23 பேரை தாராபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
தாராபுரம் அடுத்த காவல்நிலையத்திற்குட்பட்ட கரையூரில் உள்ள "ஜோதி சேம்பர்" என்ற செங்கல் சூலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பலரை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக சென்னையில் செயல்பட்டு வரும் "நிலைத்த வளர்ச்சிக்கான கழகம்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் வழக்கறிஞர் அம்மு மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ஆகியோர் தாராபுரம் சார் ஆட்சியரிடம் இது குறித்து நேரில் சென்று புகாரளித்தனர். இதை தொடர்ந்து, கரையூர் ஜோதி சேம்பருக்கு சென்ற தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், அங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (73), வள்ளியம்மாள் (90), பாண்டு ரங்கன் (65), பொன்னம்மாள் (56) , பழனிவேல் (18), பாலாஜி (11), பிரியதர்சினி (12), பிரியா (9) மற்றும் மகாலட்சுமி, சிவகார்த்திகேயன், சுதேசி ஆகிய 7 சிறுவர்கள் உள்ளிட்ட 23 பேர் கடந்த 5 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இங்கு வேலை செய்து வருவது தெரிய வந்தது. இவர்களை குறைந்த முன்பணம் கொடுத்து அழைத்து வந்த செங்கல் சேம்பர் நிர்வாகம் குறைந்த கூலி கொடுத்து, இரவு பகலாக வேலை வாங்கியதோடு, அவர்களை கொத்தடிமைகளாக அடைத்து வைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், 70 வயது மூதாட்டியான வள்ளியம்மாள் வேலை செய்துகொண்டிருந்த போது கீழே விழுந்து இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்காமல் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த 23 பேரையும் மீட்ட தாராபுரம் சார் ஆட்சியர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்ததோடு, அவர்களை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.