கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அடுத்த 4 மாதத்திற்குள் அழிக்க வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் அடுத்த 4 மாதத்திற்குள் அழிக்க வேண்டும் என கோவை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் முறையாக குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்றும், பல ஏக்கர் நிலத்தில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருவதாகவும் ம.தி.மு.க.,வைச் சேர்ந்த ஈஸ்வரன் கடந்த 2013-ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
கடந்த 5 வருடமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில், இன்று டெல்லியில் இருந்து நீதிபதிகள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மனுதாரரிடம் விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கிற்காக, கோவை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பொறியாளர் சரவணகுமார் டெல்லி சென்று மாநகராட்சி தரப்பில் விளக்கமளித்தார்.
வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், "வெள்ளலூர் குப்பை கிடங்கில் 15 இலட்சத்து 50 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு தேங்கியுள்ள பழைய குப்பைகள் பயோமைனிங் முறையில் அடுத்த 4 மாதத்திற்குள் அழிக்கப்படவேண்டும். மேலும், குப்பை கிடங்கு செயல்படும் முறை குறித்து முன்னாள் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான கமிட்டி விசாரிக்கும்," என தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விசாரணை குறித்து ம.தி.மு.க.,வின் வே.ஈஸ்வரன் கூறியதாவது :- நகரில் உருவாகும் 80% குப்பை, சேகரிக்கப்படும் இடத்திலேயே பிரிக்கப்பட்டு வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாநகராட்சி பசுமை தீர்ப்பாயத்தில் கூறிவந்தது. குப்பை குவியலை பையோமைனிங் முறையில் அழித்திட ரூ. 98 கோடி செலவில் திட்டங்கள் வகுத்துள்ளதாகும் கூறியது. இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த பசுமை தீர்ப்பாயம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு கோவை மாநகராட்சியின் தகவல்கள் அனைத்தும் போலியானவை என நிரூபித்துள்ளது.
வெள்ளலூர் பகுதியில் மலை போல் தேங்கியுள்ள குப்பைகளால் அப்பகுதியில் உள்ள மக்கள் மழை நேரங்களில், கொசு மற்றும் ஈ தொல்லைகள், துர்நாற்றம் போன்ற பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர், என்றார்.