கோவை: கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலம் மறு அளவீடு நடவடிக்கையால் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.177 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டைவிட இது ரூ.40.60 கோடி அதிகமாகும்
கோவை: கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலம் மறு அளவீடு நடவடிக்கையால் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.177 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டைவிட இது ரூ.40.60 கோடி அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி சார்பில் நிலம் மறு அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அனுமதியின்றி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களையும், ஒப்புதல் பெற்ற கட்டிட வரைபடத்தின் அளவுகளை மீறி கட்டப்பட்ட குடியிருப்பின் பரப்பளவு விவரங்களையும் ஆய்வு செய்து மறு மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சொத்து வரியாக மட்டும் ரூ.83 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை சென்ற ஆண்டைவிட ரூ.21 கோடி அதிகமாகும்.
இதேபோல், குடிநீர் கட்டணமும் ரூ.3 கோடி அதிகரித்து, தற்போது வரை ரூ.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் சொத்து வரி மேலும் அதிகரித்துள்ளதால், மாநகராட்சியின் மொத்த வருவாய் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:
"கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலம் மறு அளவீடு நடவடிக்கையால் கடந்த ஆறு மாதத்தில் ரூ.15 கோடி வரை வருவாய் அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் இருந்தது. கடந்த 6 மாதங்களாக அவர்களிடமும் சொத்துவரி வசூலிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் மாநகராட்சிக்கு ரூ.40.60 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இதே போல், சொத்து மற்றும் குடிநீருக்கான வரி உயர்வு இந்த மாதம் முதல் அமலில் வரும் போது, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கணக்கிடுகையில் இன்னும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்." என்றார்
குடிநீர் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி, தொழில் வரி, குத்தகை மற்றும் கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களின் மூலமாக நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மாநகராட்சிக்கு மொத்த வருவாய் ரூ.177 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில், மாநகராட்சியின் வருவாய் ரூ.136 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.