நீலகிரி : 2 ஆண்டுகளாக நிலுவை போடப்பட்டிருந்த உதகை மத்திய பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி : 2 ஆண்டுகளாக நிலுவை போடப்பட்டிருந்த உதகை மத்திய பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சுற்றுலா நகரமான உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், மரவியல் பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் மூலம் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், உள்ளூர் பொதுமக்கள் சமவெளி பிரதேசங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் அரசு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக மத்திய பேருந்து நிலையம் முறையாகப் பராமரிக்கப்படாததால் மழை காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பேருந்து நிலையம் தண்ணீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கும். இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பேருந்து நிலையத்தைப் புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதனைதொடர்ந்து, கடந்தாண்டு அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர், உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்ற 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக கூறியிருந்தார். தமிழக அரசு அறிவித்தபடி, புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் 2 ஆண்டுகளாக தொடங்காமல் இருந்ததால் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகை மத்தியப் பேருந்து நிலையம் சீரமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.