கோவை: பாய் விரிப்பு, பெட்டி, தலையணைகளுடன் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பாய் விரிப்பு, பெட்டி, தலையணைகளுடன் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னரும் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை அலைக்கழித்து வருவதாகக் கூறி என்.ஐ.ஏ அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா அமைப்பினர் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநில செயலாளர் முஹமதுபையஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக பாய் விரிப்பு, பெட்டி, தலையணைகளுடன் என்.ஐ.ஏ அலுவலகத்தை முற்றுகை இடச் சென்றவர்களை பந்தய சாலை அருகே போலீசார் மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 400 பேரை கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து மாநில செயலாளர் முகமது பயாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ தடம் புரண்டு நடந்து கொள்கிறது. மேலும், இந்த விசாரணை மாநில சுயாட்சியை அழிக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வின் செயல். தமிழகத்தில் பா.ஜ.க.,விற்கு அடித்தளம் இல்லாத காரணத்தால் தேசிய புலனாய்வு முகாமை மூலம் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றனர். விருப்பு வெறுப்பின்றி விசாரணையை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.