கோவை: மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
கோவை: மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நாடு முழுவதும் மருந்து விற்பனையாளர்கள் நள்ளிரவு 12 மணி முதல், இன்று இரவு 12 மணி வரை ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், மாநகர பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் கருப்பையா, "ஆன்லைனில் மருந்துகள் விற்பனை மூலம் இளைஞர்கள் ஸ்டீராய்டு மருந்துகளை எளிதில் பெற முடியும்.
இதனால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல மருந்துகளை அதிகளவில் பொதுமக்களிடையே உலவ விட முடியும். தற்போது நடைமுறையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டுமே கடைகளில் விற்கப்படுகிறது. அதன் காரணமாகவே ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்துகிறோம்.

கிராமப்புறங்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மாலை ஆறு மணிக்கு மேல் மருந்துகள் விற்பனை செய்யப்படும்." என்றார்.
நீலகிரி
நீலகிரி நகர பகுதியில் 165 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டு நாடு தழுவிய இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.