கோவை: பேரூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும் எம்.எல்.ஏ கார்த்திக் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: பேரூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும் எம்.எல்.ஏ கார்த்திக் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) தொண்டாமுத்தூர் ஒன்றிய தி.மு.க சார்பில் அ.தி.மு.க அரசின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.,வின் ஆர் எஸ் பாரதி உட்பட எம்.எல்.ஏ கார்த்திக் என கட்சியின் பல்வேறு முக்கிய நபர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை மேடையில் பேசினர்.

அதேபோல அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்கள், முறைகேடுகள் என பல குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ கார்த்திக் பேசினார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, பேரூர் அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தி.மு.க.,வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தி.மு.க நிர்வாகிகள் சேனாதிபதி, முத்துசாமி, சூர்யா வெற்றி கொண்டான் மற்றும் சி.ஆர்.ராமச்சந்திரன் உட்பட ஏழு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 15/18 u/s 294/b,504, 505,153A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பேரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாக பேசியது, பொது மக்கள் அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டது உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.