கோவை: கோவையில் தனியார் நிலம் ஒன்றில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் தனியார் நிலம் ஒன்றில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது பழங்கால அம்மன் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ரத்தினபுரியை அடுத்த கண்ணப்பநகர் பத்தாவது வீதி பகுதியில் உள்ள அருள்மிகு முத்துக்கண் மாரியம்மன் கோவில் அருகே முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக முத்துராஜ் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிந்தார்.

அப்போது சுமார் 7 அடி ஆழம் தோண்டிய போது புதையுண்ட நிலையில் சிலை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சிலை பாதுகாப்பாக குழிக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இதையடுத்து முத்துராஜ் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார்.
கோவில் அருகே 7 அடி ஆழத்தில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரவியதை அடுத்து உடனடியாக அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரி உள்ளிட்டோர் அம்மன் சிலைக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து மாலையிட்டு பூஜை செய்தனர்.
பின்னர், அங்கு வந்த கோவை வடக்கு வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கற்சிலையை ஒப்படைத்தனர். மீட்கப்பட்டுள்ள ஒன்றரை அடி உயரமுள்ள இந்தக் கற்சிலையானது பழங்கால சிலை எனவும், ஆனால் எத்தனை ஆண்டு பழமையான சிலை என்பது தொல்பொருள் ஆய்வுக்கு பிறகே தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.