கோவை : சின்னவேடம்பட்டி அருகே வறண்டு கிடந்த கால்வாயை பசுமை வனமாக மாற்றிய கே'சர்ஸ் இன்டர்நேசனல் பள்ளியின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை : சின்னவேடம்பட்டி அருகே வறண்டு கிடந்த கால்வாயை பசுமை வனமாக மாற்றிய கே'சர்ஸ் இன்டர்நேசனல் பள்ளியின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சின்னவேடம்பட்டி அருகே உள்ள பாலைவனம் போல காட்சியளித்த கால்வாயை அப்பகுதி மக்கள் குப்பைகளைக் கொட்டி குப்பை மேடாக பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கே'சர்ஸ் இன்டர்நேசனல் பள்ளி நிர்வாகம் சுமார் ரூ. 1.07 லட்சம் செலவில் 2.5 ஏக்கர் பரப்பளவு கால்வாயை தூய்மை செய்தது. இதைத் தொடர்ந்து, அப்பள்ளியைச் சேர்ந்த விவசாயக்குழு மற்றும் சமூக சேவைக் குழுக்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பனை விதைகளை கால்வாயின் கரைப்பகுதிகளில் நடவு செய்தனர்.

மேலும், மண் வளத்திற்கு ஏற்ற மரங்களின் விதைகளையும் நடவு செய்த மாணவர்கள், பறவைகளுக்கு பிடித்தமான மரக்கன்றுகளையும் நட்டு மீண்டும் அப்பகுதியில் பசுமையை மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பள்ளியின் நிர்வாக இயக்குநர் லலிதா பிரகாஷ் கூறுகையில், "வறண்டு கிடந்த இந்த கால்வாயை உள்ளூர் மக்கள் திறந்தவெளி குப்பை தொட்டியாக பயன்படுத்தி வந்தனர். நீண்ட நாட்கள் வறட்சியில் பாதிக்கப்பட்ட இந்தக் கால்வாயில், சில தனியார் நிறுவனம் கழிவு நீரை வெளியேற்றி வந்தது. மேலும், திறந்தவெளி என்பதால் இங்கு சிலர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் லாரிகளில் கொண்டுவந்து கட்டிடக் கழிவுகளையும் கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

தற்போது, இங்கு மரக்கன்றுகளை நடவு செய்வதன் மூலமாக மீண்டும் 200 அடிக்கு நிலத்தடி நீரினை அதிகரிக்கச் செய்ய முடியும். இன்று நடவு செய்யப்பட்ட மரங்களை அருகே உள்ள விவசாயிகள் நீரை ஊற்றி பராமரிக்க உள்ளனர்," என்றார்.

அருளழகத்தைச் சேர்ந்த பாரதிதாசன் கூறியதாவது :- நடவு செய்யப்பட்ட பனை மர விதைகள் கால்வாயின் கரைகளை வலிமைப்படுத்தக் கூடியது. மேலும், அணில், இந்தியன் ரோலர் போன்ற பறவைகள், விலங்குகளுக்கு நல்ல இருப்பிடமாகவும் இந்த மரங்கள் இருக்கும், எனக் கூறினார்.

குளங்கள், ஆறுகள் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளைப் பாதுகாப்பதில் பல்வேறு அமைப்புகள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நிலையில், தனியார் பள்ளியும் தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பது அனைவரிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.