கோவை: கோவை மாநகராட்சி சார்பில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான டெண்டர் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி சார்பில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான டெண்டர் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, உக்கடம் பகுதியில் கழிநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இங்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கே தற்போது சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனையாகி வருகிறது.
இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்காக ராமநாதபுரத்தை அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் 6.50 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் 40 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நல சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, மாநில பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மாநகராட்சிக்கு எதிராக தீரப்பு வந்ததால் கட்டிடப் பணிகள் அப்போதே நிறுத்தப்பட்டன.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்க வேண்டி கடந்த 2016 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, அப்பகுதி மக்களின் கண்காணிப்புடன் மாநகராட்சி மேற்கொள்ளலாம். காற்று மாசு, ஒலி மாசு ஏற்படாத வகையில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு சாதகமாக உத்தரவிடப்பட்டது.
எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பனிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து, ரூ. 43 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் பணிகள் தொடங்குவது குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் வராதபட்சத்தில் புதிதாக டெண்டர் விடப்பட்டு விரைவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தினர் தற்போது திவால் நிலையை அடைந்ததால் அவர்களுடனான ஒப்பந்தத்தை மாநகராட்சியினர் ரத்து செய்துள்ளனர்.
மேலும், புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் வரும் 27-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதேபோல, ஒண்டிப்புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் விரைவில் இயக்கிட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த செய்தி தொடர்பான செய்திக்கு - கிளிக் செய்யவும்