நீலகிரி: நீலகிரி வனப்பகுதிக்குள் நுழைய அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி வனப்பகுதிக்குள் நுழைய அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன விலங்குகளையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கில், நீலகிரி வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் செயல்பட்டுவருகிறது. ஆனால் இதன் உறுப்பினர்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து, விலங்குகளை வேட்டையாடுவதாகவும், வனம் அழிக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சீதாராமன், வனக்குற்றங்களை தடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த மனு விசாரணையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீலகிரி வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள், வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து, வேறுயாரையும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார். இது தொடர்பாக, பொது அறிவிப்பும் வெளியிட வேண்டுமென, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.