கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூறுவதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூறுவதாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பயிற்சி பட்டறை கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகளுக்கு இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன் இன்று கோவை வந்து பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பயிலரங்கில் பல துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்பின் பிரச்சார ஆலோசகர் அவினாஷ் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார். இதுபோன்ற பயிற்சி முகாம்கள் தொடர்ந்து நடத்த உள்ளோம். இதில் தேர்தலை எதிர் கொள்ளும் முறை உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது எண்களின் நிலைப்பாடு. பா.ஜ.க.,வினர் கருத்திற்கு எதிர் கருத்து சொல்லக் கூடாது என்று நினைக்கின்றனர். அது ஜனநாயக நாட்டில் ஒத்து வராத ஒரு விஷயம்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் கலந்து கொள்ளப் போவதில்லை. தேர்தலை உன்னிப்பாக கவனிப்போம், விமர்சிப்போம், மக்களுக்கு நல்லதைச் சொல்வோம். இதைவிடப் பெரிய தேர்தல் களம் வருவதால் அதற்குத் தயாராகி வருகின்றோம்.
உள்ளாட்சி தேர்தலில் தலையிட வேண்டாம் என நினைக்கின்றோம். 7 பேர் விடுதலை தொடர்பான சட்ட விவகாரத்தில் இவ்வளவு நாள் தாமதப்படுத்தப்பட்டது, அதனால், இப்போது அவசரப்படக் கூடாது. எது நியாயமான மற்றும் நேர்மையான செயலோ அது கட்டாயம் நடக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையும் விமர்சிக்கக் கூடாது. அ.தி.மு.க.,வினர் சப்பாணி என்ற படத்தின் கேரக்டரை சொல்லிப் பேசுகின்றனர். அதற்கு நான் பதிலுக்கு ஏதாவது சொன்னால் வருத்தப்படுவார்கள்.
தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் சொல்கின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு விட்டது. மாற்றம் மாற்றம் என பேசிக்கொண்டு இருக்காமல் மாற்றமாகவே செயல்பட்டு வருகிறோம். தலைமைச் செயலகத்தில் இருந்த ஊழல், புழல் சிறை வரை பரவி உள்ளது.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.