நீலகிரி: உதகை கல்லட்டி மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர் செடிகளை பிடுங்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி: உதகை கல்லட்டி மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர் செடிகளை பிடுங்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் அவ்வப்போது குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளூர் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். அடிக்கடி சில இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்தாலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களே சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடநாடு, கீழ்கோத்தகிரி, எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் இம்முறை குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது. தற்போது உதகை அருகேயுள்ள கல்லட்டி மற்றும் சோலாடா மலைச் சரிவுகளில் அதிகளவு குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.
மலை முழுக்க பூத்துள்ள இந்த குறிஞ்சி மலர்களை நாள் தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழும் வகையில் குறிஞ்சி விழாவும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், குறிஞ்சி மலர் செடிகளை சிலர் வேருடன் பிடுங்கிச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனால், அந்த செடிகள் அழியக் கூடிய அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து, கல்லட்டி மலைப்பாதையில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர் செடிகளை வேருடன் பிடுங்கி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கும் சோலாடா மலைச்சரிவில் குறிஞ்சி மலர் செடிகளை பிடுங்கிச் செல்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது குறிஞ்சி செடிகளை பிடுங்கிச் செல்லும் செயல்களில் யாரும் ஈடுபடுவதில்லை.